அரசு தேர்வுக்கான வினாத்தாள் ‘லீக்’ அரசு ஊழியர்,ஆசிரியை உள்பட 9 பேர் கைது: தேர்வு ரத்து; பரபரப்பு தகவல்கள்
3/16/2023 5:42:30 PM
திருமலை: அரசு தேர்வுக்கான வினாத்தாள் லீக் ஆன விவகாரம் ெதாடர்பாக இளநிலை உதவியாளர், ஆசிரியை உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே கடந்த வாரம் நடந்த அரசு தேர்வை மாநில தேர்வாணையம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ராஜமகேந்திராவத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் (32), பிடெக் பட்டதாரி. இவர் தெலங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக உள்ளார். இவருக்கு தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டம் தாண்டாவை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ரேணுகா (35) என்பவர் அறிமுகமானார். இவரது அண்ணன் ராஜேஷ்வர்நாயக் (33), அரசு தேர்வுகளுக்காக விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில் ஆசிரியை ரேணுகா தனது அண்ணன் ராஜேஷ்வர்நாயக் அரசு தேர்வில் தேர்ச்சியடைய பிரவீன்குமாரின் உதவியை நாடி வினாத்தாளை தரும்படி கேட்டுள்ளார். அதற்கு பிரவீன்குமார், ெதாழில்நுட்ப பிரிவில் உள்ளவர்களுக்கு பல லட்சம் தரவேண்டியது இருக்கும் எனக்கூறினார். அதற்கு ரேணுகா மற்றும் அவரது கணவர் தக்யாநாயக் ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த மார்ச் 5ம்தேதி நடந்த தேர்வுக்காக பிரவீன்குமாரிடம் ரூ.10 லட்சத்தை ரேணுகா மற்றும் அவரது கணவர் கொடுத்துள்ளனர்.
இதைபெற்றுக்கொண்ட பிரவீன்குமார், தேர்வாணைய தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ராஜசேகர் என்பவருடன் சேர்ந்து தேர்வாணைய தனிசெயலாளரின் கணினி ஐ.பி எண்ணை தொழில்நுட்ப முறையில் கைப்பற்றியுள்ளார். பின்னர் அதில் பல்வேறு அரசு தேர்வுக்காக வைத்திருந்த அனைத்து வினாத்தாள்களையும் 4 பென் டிரைவ்களில் சேகரித்துள்ளார். பின்னர் அதனை ரேணுகா தம்பதியிடம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் ரேணுகா, அந்த வினாத்தாளை தனது அண்ணனுக்கு கொடுத்ததோடு, அதனை தனது வீட்டின் அருகே வசிக்கும் போலீஸ் கான்ஸ்டபிள்களான 3 பேருக்கு ரூ.15 லட்சத்திற்கு விற்றுள்ளார். இதனிடையே ஐபி எண்கள் திறந்து வினாத்தாள்களை டவுன்லோடு செய்யப்பட்டதை தொழில்நுட்ப உதவியுடன் அறிந்த தனி செயலாளர் கடும் அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக அரசு உயரதிகாரிகளுக்கு தெரிவித்து கடந்த 3ம்தேதி பேகம்பஜார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மத்திய மண்டல அதிரடிப்படை மற்றும் பேகம்பஜார் போலீசார் மற்றும் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தியதில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தது.
இதையடுத்து வினாத்தாள் மோசடியில் ஈடுபட்ட இளநிலை உதவியாளர் பிரவீன்குமார், தேர்வாணைய தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ராஜசேகர், அரசு பள்ளி ஆசிரியை ரேணுகா, இவரது கணவர் தக்யாநாயக், அண்ணன் ராஜேஷ்வர்நாயக் மற்றும் நிலேஷ்நாயக், கோபால்நாயக், ஸ்ரீனிவாஸ், ராஜேந்திரநாயக் ஆகிய 9 பேரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் துருவிதுருவி விசாரித்து வருகின்றனர். இதனிடையே வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த 5ம்தேதி நடந்த அரசு தேர்வை ரத்து செய்து தேர்வாணையம் நேற்று நள்ளிரவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு தேர்வு வினாத்தாளை லீக் செய்த விவகாரம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.