ஆளுங்கட்சி - எதிர்கட்சி எம்பிக்களின் அமளியால் தொடர்ந்து 4வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்: மோடியின் வெளிநாட்டு பேச்சு குறித்து கார்கே காட்டம்
3/16/2023 5:34:48 PM
புதுடெல்லி: ஆளுங்கட்சி - எதிர்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் இன்று 4வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. பிரதமர் மோடியின் கடந்த கால வெளிநாட்டு பேச்சுகள் குறித்து கார்கே பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் இங்கிலாந்தில் பேசுகையில், இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகவும், ஜனநாயக அமைப்புகள் மீது கொடூர தாக்குதல் நடப்பதாகவும் கூறினார். வெளிநாட்டு மண்ணில் இருந்து கொண்டு, இந்தியாவை இழிவுபடுத்தி பேசி விட்டதாக கூறி நாடாளுமன்றத்தில் ஆளும் பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ராகுல்காந்தி தனது லண்டன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.
அதேநேரம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள், அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் எனக்கூறி குரல் எழுப்பி வருகின்றன. இதனால் கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியது. நேற்று எதிர்கட்சிகளின் சார்பில் அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கிய பேரணியும் நடந்தது.இந்நிலையில் இன்று நான்காவது நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கும் முன்பாக, டெல்லியில் நிருபர்களை சந்தித்த ஒன்றிய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘இங்கிலாந்தில் ராகுல்காந்தி தெரிவித்த கருத்துகள், இந்திய ஜனநாயக அமைப்புகளையும், நாடாளுமன்றத்தையும் அவமதிக்கும் செயல். ராகுல்காந்தியின் குடும்பத்தினரின் உத்தரவின்பேரில், மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள், காகிதங்களை கிழித்து சபாநாயகர் இருக்கை மீது எறிந்தார்களே? இதுதான் ஜனநாயகமா? ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒவ்வொரு இந்திய குடிமகனும் கூறுகிறான்.
பிரதமர் மோடி மீதான ராகுல்காந்தியின் வெறுப்பு, இந்தியாவுக்கு எதிரான வெறுப்பாக மாறியுள்ளது. அவர் சொல்வதுபோல், இந்திய ஜனநாயகம் ஆபத்தில் இல்லை. வெளிநாட்டு மண்ணில் இந்தியாவுக்கு எதிரான அவரது செயல்பாடுகளால், காங்கிரசைத்தான் இந்திய மக்கள் அரசியல் அழிவுக்கு கொண்டு வந்துள்ளனர்’ என்றார். அதன்பின் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ‘அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி) விசாரணை வேண்டும் என்பது எங்களது கோரிக்கை; ஆனால் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் ஒன்றிய அரசு சதி செய்கிறது. வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் குறித்து அவர்கள் (ஒன்றிய அரசு) விவாதிக்க விரும்பவில்லை.
ராகுல்காந்தி லண்டனில் பேசிய விஷயத்தில் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை. இதற்கு முன் பல தருணங்களில் வெளிநாடுகள் சென்ற பிரதமர் மோடி, இந்தியாவுக்கு எதிராக பேசியுள்ளார்’ என்றார். தொடர்ந்து காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆளுங்கட்சி தரப்பினர் சீர்குலைத்துவிட்டு, அதற்கான பழியை எதிர்க்கட்சிகள் மீது சுமத்துகிறார்கள். கர்நாடக மாநில பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு, தற்போது நாடாளுமன்றத்தில் சதி வேலைகளை அரங்கேற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ராகுல் காந்தியின் இமேஜை கெடுக்க முயற்சிக்கின்றனர். உண்மையில் மோடி அரசுக்கு தைரியம் இருந்தால், ராகுல்காந்தி லண்டனில் பேசிய பேச்சு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். அப்போது உண்மையில் நாட்டுக்கு எதிரானவர்கள் யார் என்பதை நிரூபிப்போம்’ என்றார்.
அதன்பின் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் அலுவலகத்தில், ஒத்த கருத்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதேபோல் பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்களான ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், அனுராக் தாக்கூர், கிரண் ரிஜிஜூ, பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கியது. மக்களவை தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோர் அவைக்கு வந்தனர். ஆளுங்கட்சி - எதிர்கட்சி உறுப்பினர்கள் கடந்த 3 நாட்களாக எழுப்பிய கோஷங்களை மீண்டும் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அதனால் அவை நடவடிக்கைகளை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர்கள் அறிவித்தனர்.
நாடு திரும்பிய ராகுல்
இங்கிலாந்து பயணத்தை முடித்துவிட்டு ெடல்லி திரும்பியுள்ள ராகுல் காந்தி, இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வார் என்றும், அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து தனது லண்டன் பேச்சு குறித்தும் கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றம் கூடியபோது அவர் கூட்டத் தொடரில் பங்கேற்கவில்லை.