ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு; சிபிஐ கோர்ட்டில் லாலு, ரப்ரி, மிசா பாரதி ஆஜர்: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன்
3/15/2023 5:38:32 PM
புதுடெல்லி: ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிராசாத், அவரது மனைவி ரப்ரி தேவி, அவர்களது மகள் உள்ளிட்டோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினர். கடந்த 2004 முதல் 2009ம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் பதவி வகித்தார். அப்போது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் பாட்னாவை சேர்ந்த சிலர் நியமிக்கப்பட்டனர். அதற்கு கைம்மாறாக, வேலை பெற்றவர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சுமார் 1.05 லட்சம் சதுரஅடி நிலம், லாலு குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றப்பட்டுப் பதிவு செய்யப்பட்டது.
அந்த நிலத்தை சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினர் நேரடியாக வாங்கியுள்ளனர். இவ்விவகாரம் ெதாடர்பாக லாலு பிரசாத், அவரது மனைவி ரப்ரி தேவி, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீது டெல்லி சிபிஐ வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த வாரம் சிபிஐ சோதனை நடத்தியது. அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ. 1 கோடி ரொக்கம், ரூ. 1.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள், தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதற்கு முன்னதாக அமலாக்கத்துறையின் விசாரணையில், ரூ. 600 கோடி மதிப்பிலான மோசடி வருவாய்க்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மேற்கண்ட வழக்கில் லாலு யாதவ், ரப்ரி தேவி, மிசா பாரதி உட்பட 16 பேருக்கு சிபிஐ நீதிமன்றம் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதனால் இந்த வழக்கின் விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ரப்ரி தேவி, அவரது மகளான எம்பி மிசா பாரதி உள்ளிட்டோர் ஆஜராகினர். இவர்களில் சமீபத்தில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட லாலு, சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர்களிடம், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட்டது.
சிபிஐ கைது செய்யாமல் இருப்பதற்காக குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் ெசய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒவ்வொருவரும் தலா ரூ.50,000 சொந்த ஜாமீன் பத்திரம் மற்றும் அதற்கு இணையான ஜாமீன் தொகையை வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம், அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.