அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ‘வந்தே பாரத்’ ரயிலை இயக்கிய முதல் சாதனை பெண்: பல்வேறு தரப்பினரும் பாராட்டு
3/14/2023 7:28:59 PM
மும்பை: இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநரான சுரேகா யாதவ் என்ற பெண், தற்போது முதன்முறையாக வந்தேபாரத் ரயிலை இயக்கி சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் சதாராவைச் சேர்ந்த சுரேகா யாதவ் என்ற பெண், கடந்த 1988ம் ஆண்டில் இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் ஆனார். அதேநேரம் அவர் ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் என்ற பெருமையையும் பெற்றார். இதற்காக அவருக்கு ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்தது.
இந்நிலையில் சுரேகா யாதவின் மற்றொரு சாதனையாக, சோலாப்பூரிலிருந்து மும்பையின் சி.எஸ்.எம்.டிக்கு செல்லும் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயிலை தற்போது இயக்கி சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் ரயிலை இயக்க எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. சோலாப்பூரில் இருந்து சி.எஸ்.எம்.டி-க்கு திட்டமிட்ட காலக்கெடுவுக்கு 5 நிமிடங்கள் முன்னதாக கொண்டு சேர்த்தேன்’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார். இவரை சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.