உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் இந்திய ஆயுத இறக்குமதி 11% குறைப்பு: சர்வதேச ஆய்வில் தகவல்
3/14/2023 7:28:10 PM
புதுடெல்லி: கடந்த 2013-17 முதல் 2018-22ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்திய ஆயுத இறக்குமதி 11 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (எஸ்ஐபிஆர்ஐ), சர்வதேச நாடுகளின் ராணுவத் தகவல்களை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை குறித்து மூத்த ஆய்வாளரான பீட்டர் வெஸ்மேன் கூறுகையில், ‘ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட உக்ரைன், கடந்த ஆண்டில் மட்டும் அதிகளவு ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளது. கடந்த 2013-17 முதல் 2018-22ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் ஆயுத இறக்குமதி 11 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது.
ஆனால் இறக்குமதியில் முதலிடத்தில் உள்ளது. ஆயுத இறக்குமதியை காட்டிலும் உள்நாட்டு தயாரிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், படிப்படியாக இறக்குமதியை இந்தியா குறைத்துக் கொண்டுள்ளது. கடந்த 2018-22ம் ஆண்டில் உலகின் ஐந்து பெரிய ஆயுத இறக்குமதியாளர்களாக இந்தியா, சவுதி அரேபியா, கத்தார், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இருந்தன. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஆயுத ஏற்றுமதியாளர்களாக உள்ளனர். உலகின் எட்டாவது ஆயுத இறக்குமதியாளரான பாகிஸ்தானின் இறக்குமதி 2018-22ம் ஆண்டில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனா அந்நாட்டிற்கு அதிகளவில் ஆயுதங்களை சப்ளை செய்துள்ளது’ என்றார்.