போபால் விஷவாயு வழக்கு ஒன்றிய அரசின் சீராய்வு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி
3/14/2023 6:48:55 PM
புதுடெல்லி: போபால் விஷவாயு வழக்கில் கூடுதல் இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 1984ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு சொந்தமான பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த விஷவாயு விபத்தில் சுமார் 3,000 பேர் பலியாகினர். போபால் விஷவாயுவால் ஏற்பட்ட பாதிப்பு இன்னமும் அங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்கு முதலில் நீதிமன்றம் ரூ.750 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக ரூ.7,844 கோடி இழப்பீடு வழங்க அமெரிக்காவை சேர்ந்த யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு உத்தரவிடக் கோரியும், இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இம்மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு முன் வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘போபால் விஷவாயு விபத்துக்கு கூடுதல் இழப்பீடு கோரிய மனுவில் முகாந்திரம் இல்லை’ எனக்கூறி மனுவை டிஸ்மிஸ் செய்துள்ளது.