லண்டனில் ராகுல் காந்தி பேசிய விவகாரம், 2வது நாளாக ஆளுங்கட்சி எம்பிக்கள் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு; ஆஸ்கர் விருது குழுவுக்கு பாராட்டு
3/14/2023 6:43:29 PM
புதுடெல்லி: லண்டனில் ராகுல் காந்தி பேசிய விவகாரம் தொடர்பாக 2வது நாளாக ஆளுங்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. முன்னதாக இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற குழுவினருக்கு அவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஆளும் கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியது இல்லை. முதல் முறையாக ஆளும் கட்சி எம்பிக்கள் இரு நாட்களாக போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கியது. அவை தொடங்கியதும், இந்திய நாடாளுமன்றம் குறித்து இங்கிலாந்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மக்களவையில் ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பிரஹலாத் ஜோஷியும், மாநிலங்களவையில் பியூஷ் கோயலும் பேசினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரையும், அதனை தொடர்ந்து நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் தொடங்கும் முன், ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங், அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து சபையில் விவாதிக்க கோரி நோட்டீஸ் அளித்தார். இதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி நோட்டீஸ் அளித்தனர். மேலும் சில எம்பிக்கள் எதிர்கட்சி தலைவர்களுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறியும், இதுகுறித்து விவாதிக்க கோரியும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர். இதற்கிடையே அதானி குழும விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். அதானி விவகாரத்தில் ஜேபிசி விசாரணை கோரி பிஆர்எஸ், ஆம் ஆத்மி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற நுழைவு வாயில் முன் போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற அவை நடவடிக்கையில் பங்கேற்க வந்த காங்கிரஸ் எம்பி ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, நிருபர்களிடம் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு ஒன்றிய அரசு விரும்பவில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தை முடக்கும் வகையில் கூச்சல் போடுவதை எப்போதாவது பார்த்ததுண்டா? ராகுல் காந்தி எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? மாறாக, அவர்கள் (ஒன்றிய அரசு) தான் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று ஆவேசமாக கூறினார். தொடர்ந்து காலை 11 மணிக்கு அவை நடவடிக்கைகள் தொடங்கியதும், இரு அவைகளிலும் ஆஸ்கர் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் திரைப்படக் குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதன்பின் இரு அவைகளிலும் ராகுல்காந்தி லண்டனில் பேசிய விவகாரம் ெதாடர்பாக ஆளுங்கட்சி எம்பிக்களுக்கும், எதிர்கட்சி எம்பிக்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவையில் கூச்சல், குழப்பமும் ஏற்பட்டதால், அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. ஆளுங்கட்சி எம்பிக்களே இரண்டாவது நாளாக அவையில் கூச்சல், குழப்பம், அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.