தேர்தல் முடிவுக்கு பின் வன்முறை மேகாலயாவில் சில இடங்களில் ஊரடங்கு: ஆட்சி அமைக்கப் போவது யார்?
3/3/2023 7:34:15 PM
ஷில்லாங்: தேர்தல் முடிவுக்கு பின்னர் மேகாலயாவில் நடந்த சில இடங்களில் நடந்த வன்முறை சம்பவத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேகாலயாவில் நடந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆளும் தேசிய மக்கள் கட்சி மொத்தமுள்ள 59 இடங்களில் 27 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருந்தும் பெரும்பான்மை பலத்தை பெறவில்லை என்பதால், புதிய அரசை அமைப்பதற்காக பாஜகவின் (2 இடங்களில் வெற்றி) ஆதரவை மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா நாடியுள்ளார்.
இதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அவர் பேசியுள்ளார். காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தலா 5 இடங்களில் வெற்றி பெற்றன. மற்றவை 21 இடங்களில் வெற்றி பெற்றன. நேற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன், மாநிலத்தின் சில இடங்களில் கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. அதையடுத்து மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘சஹ்ஸ்னியாங் கிராமத்தில் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால், பொது அமைதி ஏற்படுவதற்காக மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.