இஸ்ரேலின் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் மூலம் இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல்: லண்டனில் ராகுல்காந்தி உரை
3/3/2023 7:33:32 PM
லண்டன்: இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் மீதான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்று லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல்காந்தி உரையாற்றினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன் இங்கிலாந்து சென்றார். அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். ‘பிக் டேட்டா அண்ட் டெமாக்ரஸி’, ‘இந்தியா - சீனா ரிலேஷன்ஸ்’ குறித்து பேசினார். அவரது உரையில், ‘கேம்பிரிட்ஜ் ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூலின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடியது சிறந்த அனுபவமாக இருந்தது. சகிப்புத்தன்மையற்ற சமூகத்தில் கேட்கும் கலையானது மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் அது தவிர்க்க முடியாதது. இதனை இந்தியா ஒற்றுமை நடை பயணத்தின் மூலம் நாங்கள் நன்றாக உணர்ந்தோம்.
புதிய உலகை வழிநடத்த, ஜனநாயக நாடுகள் நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஜனநாயக விழுமியங்களுடன் தொடர்பில்லாத உலகத்தை நாங்கள் விரும்பவில்லை; எனவே எங்களுக்கு புதிய சிந்தனை தேவை. ஜனநாயக விழுமியங்கள் இல்லாத ஒரு உலகத்தை பார்க்கவும் முடியாது. இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் மீதான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.இஸ்ரேல் நிறுவனம் தயாரித்த உளவு மென்பொருளான ‘பெகாசஸ்’ மூலம், எனது தொலைபேசி பேச்சுகள் பதிவு செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதனால் தொலைபேசியில் பேசும்போது கவனமாக இருக்குமாறு என்னை உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர். நான் மட்டுமில்லை ஏராளமான அரசியல்வாதிகளின் போன்களில் ‘பெகாசஸ்’ ஊடுருவி இருந்தது’ என்று தெரிவித்துள்ளார். மேலும், தனது பேஸ்புக் பக்கத்தில் நிகழ்ச்சியில் நடந்த புகைப்படங்களையும் ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.