கிரீசில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு
3/2/2023 5:40:15 PM
ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்சில் இருந்து தெசலோனிகிக்கு நேற்று முன்தினம் இரவு பயணிகள் ரயில் புறப்பட்டது. 350க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நள்ளிரவில் டெம்பே என்ற நகருக்கு அருகே ரயில் அதிவேகமாக சென்றபோது, எதிர்திசையில் தெசலோனிகியில் இருந்து லாரிசா நகர் நோக்கி சென்ற சரக்கு ரயில் எதிர்பாராதவிதமாக பயணிகள் ரயில் சென்ற அதே தண்டவாளத்தில் வந்தது. இதில் சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதில் பல பெட்டிகள் தடம் புரண்டு அருகில் உள்ள வயலில் விழுந்தன. சில பெட்டிகள் முற்றிலுமாக உருக்குலைந்தும், தீப்பற்றியும் எரிந்தன. இதில் அந்த பகுதி முழுவதும் கரும் புகை மண்டலம் எழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் என 100-க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நள்ளிரவு நேரம் என்பதாலும், விபத்து நடந்த பகுதியை புகை மண்டலம் சூழ்ந்திருந்ததாலும் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது.
எனினும் மீட்பு குழுவினர் ‘பிளாஸ் லைட்’டுகளை பயன்படுத்தி மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். அவர்கள் விபத்தில் உருக்குலைந்து கிடந்த ரயில் பெட்டிகளை வெட்டி அதனுள் சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 26 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 57 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஆம்புலன்ஸ்களில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.