பயணிகள் - சரக்கு ரயில் மோதல்; கிரீஸில் 26 பேர் பலி: 85 பேர் படுகாயம்
3/1/2023 4:58:37 PM
கிரீஸ்: கிரீஸில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 26 பேர் பலியானதாகவும், 85 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகருக்கு வடக்கே 380 கிலோமீட்டர் (235 மைல்) தொலைவில் உள்ள டெம்பே நகருக்கு அருகே பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இரண்டு ரயில்களின் சில பெட்டிகள் தடம் புரண்டன; மூன்று தீப்பிடித்தன. தகவலறிந்த மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதுகுறித்து தீயணைப்பு மீட்புப் பிரிவு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.
அதனால் பயணிகள் ரயிலில் பயணித்தவர்களில் 26 பேர் உடல் நசுங்கி பலியாகினர். அப்போது ஏற்பட்ட தீ விபத்தால் இடிபாடுகளில் சிக்கியும், தீக்காயத்தாலும் 85க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு லாரிசாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்வதால் மாற்றுப்பாதையில் மற்ற ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.