துருக்கியின் சேத மதிப்பு ரூ2.82 லட்சம் கோடி: உலக வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு
2/28/2023 5:41:40 PM
வாஷிங்டன்: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் மட்டும் ரூ.2.82 லட்சம் கோடி அளவிற்கு சேதம் அடைந்துள்ளதாக உலக வங்கி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் கடந்த 7ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியான நிலையில், பெருமளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உலக வங்கியின் இயக்குநர் ஹம்பர்டோ லோபஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, ‘நிலநடுக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட பேரழிவால் துருக்கியில் மட்டும் 34 பில்லியன் டாலர் (ரூ. 2.82 லட்சம் கோடி) மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளன.
இது துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% ஆகும். சிரியாவில் ஏற்பட்ட சேத மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை. குடியிருப்பு கட்டிடங்கள் ெபருமளவில் சேதமடைந்துள்ளதால் 1.25 மில்லியன் மக்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர். துருக்கிக்கு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக 1.78 பில்லியன் டாலர் நிதிஉதவி வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.