வாரிசு இல்லாததால் சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தங்கை கைது: மருத்துவமனையில் கவலைக்கிடம்
3/19/2023 5:18:24 PM
பெரம்பூர்: வாரிசு இல்லாததால் பூர்வீக சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு அண்ணனை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்ல முயன்ற தங்கையை கைது செய்தனர். பெரம்பூரில் இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பெரம்பூர் சபாபதி தெருவை சேர்ந்தவர் முனிரத்தினம் (63). இவரது மனைவி அம்முலு (60). இவர்களுக்கு குழந்தை கிடையாது. அமுலுவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 6 மாதங்களாக ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். முனிரத்தினம் வீட்டின் கீழ்தளத்தில் உள்ள ஒரு வீட்டில் முனிரத்தினத்தின் தங்கை தனலட்சுமி வசித்து வருகின்றார்.
இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் திருமணமாகிவிட்டதால் அவர்கள் தனித்தனியாக வசித்து வருகின்றனர். முனிரத்தினத்தின் மற்றொரு தங்கை பாக்கியலட்சுமி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்கள் பூர்வீக சொத்தில் வசித்துவருவதால் முனிரத்தினம் மற்றும் அவரது தங்கைகள் தனலட்சுமி, பாக்கியலட்சுமி ஆகியோர் இடையே பிரச்னை இருந்துள்ளது. பாக்கியலட்சுமியின் கணவர் தாமோதரன், இவரது மகன் உதயகுமார் ஆகியோர் பூர்வீக இடத்தில் உள்ள வீட்டின் மேல் தளத்தில் வசித்து வருகின்றனர்.
முனிரத்தினத்துக்கு குழந்தை இல்லை என்பதால் அவருக்கு தெரியாமல் அவர் குடியிருக்கும் குறிப்பிட்ட அந்த வீட்டின் பாகத்தை தனலட்சுமி ஏற்கனவே எழுதி வாங்கிவிட்டதாக தெரிகிறது. இந்த தகவல் அண்ணன் முனிரத்தினத்துக்கும் மேல் தளத்தில் தனது பாகத்தில் வசித்துவரும் தாமோதரனுக்கும் தெரியவந்துள்ளது. இதையடுத்து தனலட்சுமிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது இவ்வழக்கு முடியும் தருவாயில் உள்ளது. மேலும் இந்த வழக்கு முனிரத்தினத்துக்கு சாதகமாக வரும் என்று தெரியவந்துள்ளது. இதுபற்றி அறிந்ததும் தனலட்சுமி சிலநாட்களாகவே அடிக்கடி வந்து அண்ணன் முனிரத்தினத்திடம் தகராறு செய்துள்ளார்.
இந்த நிலையில், நேற்றிரவு மேல் தளத்தில் உள்ள தாமோதரன், அவரது மகன் ஆகியோர் முனிரத்தினத்துக்கு உணவு கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். இதன்பின்னர் முனிரத்தினம் உறங்க சென்றுவிட்டார். அதிகாலை 3 மணி அளவில் முனிரத்தினம் அலறும் சத்தம் கேட்டபோது அவரது வீட்டில் குடியிருக்கும் ராதா அம்மாள் என்பவர் சென்று பார்த்துள்ளார். பின்னர் தாமோதரன் மற்றும் உதயகுமாரை அழைத்து வந்து முனிரத்தினம் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு முனிரத்தினம் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக திருவிக.நகர் போலீசார் நடத்திய விசாரணையில், ‘’அதிகாலை 3 மணி அளவில் முனிரத்தினத்தின் தங்கை தனலட்சுமி மாடிக்கு சென்றுள்ளார். பின்னர் தான் கொண்டு சென்றிருந்த பெட்ரோலை அண்ணன் முனிரத்தினம் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். தீயில் கருகி அவர் சத்தம் போட்டதால் அங்கிருந்து தனலட்சுமி ஓடிவிட்டார்’ என்று தெரியவந்துள்ளது. இதுசம்பந்தமாக போலீசார் வழக்குபதிவு செய்து தனலட்சுமியை கைது செய்தனர். பூர்வீக சொத்து பிரச்னையில் அண்ணனை தங்கையே எரித்துக்கொல்ல முயன்ற சம்பவம் பெரம்பூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.