கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கைதான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்
3/19/2023 5:08:54 PM
பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி வஉசி நகரை சேர்ந்த சுந்தர் மற்றும் தாயாரம்மாள் நகரை சேர்ந்த முத்துக்குமரன் ஆகியோர் இணைந்து பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு காந்தி பூங்கா அருகில் பூச்சி மருந்து கடை நடத்தி வருகின்றனர். கடந்த 10ம் தேதி இரவில், கடையில் இருந்த கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.4.70 லட்சம் கொள்ளை போனது. இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து போது போலீசாருக்கு துப்பு கிடைத்தது. கடையை உடைத்து கொள்ளையடித்தது, கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த நேமம் கிராமத்தை சேர்ந்த சாகுல் அமீது(62) என்பதும், இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
சாகுல் அமீது மீது மதுரை, தேனி, ஒட்டன்சத்திரம், தஞ்சை உள்ளிட்ட பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வழக்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடினர். அதில் அவர் நேமத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடன் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து, சென்று கேரள மாநில போலீசார் உதவியுடன் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் கொள்ளையன் சாகுல்அமீதுவை போலீசார் பண்ருட்டிக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பி.ஏ. பட்டதாரியான சாகுல் அமீது கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். அப்போது நெல்லிக்குப்பத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த அவர், பின்னர் அவரை பிரிந்து விட்டார். இதன்பின்னர் மதுரையில் ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்த நிலையில், அவரையும் பிரிந்துவிட்டார். 3-வதாக நேமத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருடன் சாகுல்அமீது வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று, நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அந்த பஸ், நள்ளிரவில் பண்ருட்டி வந்த போது, அதில் இருந்து சாகுல் அமீது இறங்கி உள்ளார். அப்போது, பூச்சி மருந்து கடை பூட்டி கிடப்பதை பார்த்த அவர், கொள்ளையடிக்க முடிவு செய்தார். இதையடுத்து அந்த கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து, அங்கிருந்த பணத்தை திருடி சென்றுவிட்டார்.
திருடிய பணத்துடன் கேரளாவுக்கு சென்ற சாகுல் அமீது, அங்கு அந்த பணத்தை வைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். சில சின்னத்திரை துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் ஒரு நடிகைக்கு ரூ.40 ஆயிரம் வரைக்கும் செலவும் செய்து இருக்கிறார். அவரிடம் இருந்து ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு போலீசார் கூறினர். பின்னர் சாகுல்அமீதை நேற்று பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.