கோழி பண்ணைக்கு கடத்தமுயன்ற 2,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஊழியர் உள்பட 2 பேர் கைது
3/16/2023 5:52:47 PM
திருவள்ளூர்: திருவள்ளூரில் இருந்து கோழி பண்ணைக்கு கடத்த முயன்ற 2 டன் 700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்கும் பொருட்டு, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை, கூடுதல் காவல்துறை இயக்குநர் அருண் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், எஸ்பி கீதா, டிஎஸ்பி நாகராஜன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் போலீசார் ஆவடி அடுத்த கோலப்பஞ்சேரி சுங்கச்சாவடி பகுதியில் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை நடத்தி டிரைவரிடம் விசாரித்தனர். இதில் அவர் ஆவடி, சிரஞ்சீவி நகரை சேர்ந்த கார்த்திக் (36) என தெரியவந்தது. இதையடுத்து வேனில் இருந்து 50 கிலோ எடை கொண்ட 53 மூட்டைகளில் 2 டன் 650 கிலோ புழுங்கல் அரிசியும் 50 கிலோ எடைகொண்ட 1 மூட்டை பச்சை அரிசியும் என மொத்தம் 2 டன் 700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இந்த ரேஷன் அரிசியை கள்ளக்குறிச்சியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு கடத்த செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை பறிமுதல் செய்தனர்.
அரிசி கடத்தலில் ஈடுபட்ட கார்த்திக் என்பவர் மீதும் ரேஷன் அரிசியை திருநின்றவூர், பிரகாஷ் நகர் ரேஷன் கடையில் பதுக்கி வைத்து வேனில் ஏற்றி அனுப்பி வைத்த ரேஷன் கடை விற்பனையாளர் திருநின்றவூரை சேர்ந்த சரவணன் (34), அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வாகன உரிமையாளர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சதீஷ், அரிசி கடத்தலில் ஈடுபட்ட செங்குன்றத்தை சேர்ந்த ஹரி ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். வேன் டிரைவர் கார்த்திக் , விற்பனையாளர் சரவணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் 700 கிலோ ரேஷன் அரிசியை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.