மூதாட்டியை ஏமாற்றி ரூ.5 கோடி பணம் நகை மோசடி: கார் டிரைவர் கைது
3/19/2023 5:07:11 PM
புதுச்சேரி: புதுவையில் மூதாட்டியை ஏமாற்றி ரூ.5 கோடி பணம், நகைகளை மோசடி செய்த கார் டிரைவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (75). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இவரது கணவர் இறந்து விட்டார். இவர்களுக்கு சுப்பிரமணி, சுரேஷ், உதயசங்கர், விஸ்வநாதன் என 4 மகன்கள் உள்ளனர். இவர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இதனால் ஆதிலட்சுமி புதுச்சேரியில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆதிலட்சுமியின் வங்கிக்கணக்கில் இருந்த பணமும், நகைகளும் திடீரென மாயமானதால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து புதுச்சேரி சிபிசிஐடி பிரிவில் புகார் அளித்த ஆதிலெட்சுமி, கடந்த 2016ம் ஆண்டில் தனக்கு உதவியாளராகவும், கார் டிரைவராகவும் இருந்த ஜெயராமன் (33) என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார், ஜெயராமனை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அப்போது அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே, ஜெயராமனை போலீசார் கைது ெசய்து கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
ஆதிலட்சுமியிடம் டிரைவராக பணிபுரிந்தபோது ஜெயராமன் மிகவும் விசுவாசமாக இருந்துள்ளார். இதனால் அவரை முழுமையாக நம்பிய ஆதிலெட்சுமி, தனது வங்கி பாஸ்புக், காசோலை, ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை கொடுத்து பணம் எடுத்து வர சொல்லியுள்ளார். இதனால் ஆதிலெட்சுமியின் பணம், நகைகளை அபகரித்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட வேண்டும் என ஜெயராமன் திட்டமிட்டுள்ளார். அதன்படி ஆதிலட்சுமிக்கு சந்தேகம் வராதபடி ஜெயராமன் தனது கைவரிசையை படிப்படியாக காட்டியுள்ளார்.
முதலில் புதுவை சித்தன்குடியில் இருந்த ஆதிலெட்சுமியின் வீட்டை ஜெயராமன் தனது நண்பரின் பெயருக்கு மாற்றியுள்ளார். பின்னர் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.2 கோடி வரை பணத்தை எடுத்துள்ளார். கூடுதலாக 15 சவரன் தங்க நகைகளையும் எடுத்துள்ளார். இவற்றைக்கொண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தில் பண்ணை வீடு வாங்கி, மற்றொரு நண்பர் பெயரில் பதிவு செய்துள்ளார். மேலும் கார், டூவீலர், தங்க நகைகள் வாங்கி குவித்துள்ளார். மொத்தம் ரூ.5 கோடி ரூபாய் வரை அவர் ஏமாற்றி உள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ஜெயராமன் வைத்திருந்த கார், பைக், தங்க நகைகள், பத்திரங்கள் ஆகியவற்றை அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார், ஜெயராமனை நேற்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஜெயராமனுக்கு உதவியாக இருந்த அவரது நண்பர்கள் சத்தியராஜ், தமிழழகன், நாகராஜ், லட்சுமி நாராயணன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர்.