ரூ.100 கோடி லோன் தருவதாக மும்பை தொழிலதிபரிடம் ரூ.4 கோடி மோசடி செய்த 3 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
3/16/2023 5:50:35 PM
சென்னை: ரூ.100 கோடி லோன் தருவதாக மும்பை தொழிலதிபரிடம் ரூ.4 கோடி மோசடி செய்த 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஷியாமல் சட்டர்ஜி அளித்த புகாரில், ‘நான் நாக்பூரில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறேன். எனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய பணம் தேவைப்பட்டது. இதனால் தரகர்கள் மூலம் சென்னை ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா காலனியில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றை தொடர்பு கொண்டேன். அதன் இயக்குநர்களான பன்னீர்செல்வம், இம்தியாஷ் அகமது, பவன்குமார் ஆகியோர், தங்களது நிறுவனத்தின் மூலம் ரூ.100 கோடி கடன் தருவதாக உறுதி அளித்தனர்.
கடன் தொகைக்காக 6 மாத வட்டியாக முன்தொகை ரூ.4 கோடி தர வேண்டும் என்று கூறினர். எனக்கு ரூ.100 கோடி கடன் தொகை வந்து விடும் என்பதால் அவர்கள் கேட்ட பணத்தை அவர்களின் நிறுவனத்தின் வங்கி கணக்கு மூலம் ரூ.3.50 கோடியும், மீதமுள்ள ரூ.50 லட்சம் பணத்தை நேரிலும் கொடுத்தேன். ஆனால் சொன்னபடி அவர்கள் எனக்கு கடன் தரவில்லை. பல முறை போன் செய்தும் அவர்கள் எடுக்கவில்லை. பிறகு நேரடியாக அவர்களின் அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது, அவர்கள் நடத்திய அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. எனவே, எனக்கு லோன் வாங்கி தருவதாக ரூ.4 கோடி மோசடி செய்த 3 பேரை கைது செய்து பணத்தை மீட்டு தர வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தினார். அப்போது, ஈஞ்சம்பாக்கத்தில் போலியான பெயரில் தனியார் நிறுவனம் நடத்துவது போல் பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து, கடன் கேட்டு வந்த ஷியாமல் சட்டர்ஜியை ஏமாற்றியது தெரியவந்தது. அதைதொடர்ந்து தலைமறைவாக இருந்த 3 பேரை தனிப்படை போலீசார் உதவியுடன் தீவிரமாக தேடி வந்த நிலையில், கோவளம் அருகே உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீசார் நேற்று கோவளத்தில் உள்ள சொகுசு விடுதிக்கு சென்று மும்பை தொழிலதிபரிடம் ரூ.4 கோடி மோசடி செய்த பன்னீர்செல்வம்(43), இம்தியாஷ் அகமது(எ)சதீஷ்குமார்(37), பவன்குமார்(எ)ரவி(எ)நியமத்துல்லா(45) ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் தொழிலதிபரிடம் வாங்கிய பணம் குறித்து விசாரணை நடத்திய போது, பணத்தில் பெரும் பகுதியை சொகுசு வாழ்க்கைக்கு செலவு செய்ததாகவும், தொழிலதிபர்களை நம்ப வைக்க ஆடம்பரமாக செலவு செய்ததும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.