மது பாட்டிலால் குத்தி சிறுவன் கொலை: சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
3/13/2023 6:03:27 PM
பெரம்பலூர்: பெரம்பலூரில் மதுபாட்டிலால் சிறுவனை குத்திக்கொலை செய்த சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை பின்புறம் திருநகரை அடுத்த இந்திராநகர், அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ஜூலி. இவர்களது மகன்கள் ரோஹித் ராஜ்(14), பிரவீன்ராஜ்(12), பவுன்ராஜ்(8). கணேசன் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். 10ம் வகுப்பு படித்து வந்த ரோஹித் ராஜ் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தந்தையுடன் பூக்கடைக்கு வேலைக்கு சென்று வந்தார்.
தற்போது வேலைக்கு ஏதும் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 7.15 மணியளவில் இந்திரா நகரில் இருந்து அங்காளம்மன் கோயில் செல்லும் சாலையில் உள்ள சமுதாய கழிவறையில் இருந்து ரோஹித் ராஜ் உடலில் பலத்த வெட்டு காயங்களுடன் தன்னை காப்பாற்றுமாறு ரத்த வெள்ளத்தில் அலறியபடி வெளியே வந்து மெயின் ரோட்டுக்கு ஓடி வந்தார். ஆனால் சிறிது தூரத்திலேயே சாலையில் சரிந்து விழுந்த ரோஹித் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் பெரம்பலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெரம்பலூர் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தகவலறிந்து வந்த ரோஹித் ராஜின் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து ரோஹித் ராஜின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சமுதாய கழிவறையில் மதுபாட்டில்கள் நொறுங்கியும், அதனை சுற்றி ரத்த கறையும் இருந்தது. இதனால் மர்ம கும்பல் ரோஹித்ராஜை அழைத்து சென்று மது அருந்தி காலி மது பாட்டில்கள் உள்ளிட்டவையால் குத்தி விட்டு தப்பியிருக்கலாம். இதில் பலத்த காயமடைந்த ரோஹித் ராஜ் உயிரிழந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் போலீசார் ரோஹித்ராஜை அவரது நண்பர்களே சேர்ந்து முன்விரோதம் காரணமாக கொலை செய்திருக்கலாம் என்று அதே பகுதியை சேர்ந்த 7 பேர் மீது சந்தேகித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்திரா நகரை சேர்ந்த அய்யனார்(21) உள்பட 17, 18 வயதுள்ள 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைதானவர்களுக்கு கஞ்சா பழக்கம் உள்ளதும், கடந்த 2 நாட்களுக்கு முன் சிறுவன் ரோஹித் ராஜை அழைத்து கஞ்சா வாங்கிவரும்படி தொல்லை கொடுத்துள்ளனர்.
அதற்கு அவர் மறுத்ததுடன், போலீசில் கூறுவதாக கூறிவிட்டு வந்துவிட்டார். இதனால் கோபத்தில் இருந்த அவர்கள் நேற்றிரவு சிறுவனை வழிமறித்து கழிவறைக்குள் அழைத்து சென்று மதுபாட்டிலை உடைத்து குத்தி கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் முக்கிய குற்றவாளியான சீனிவாசன் என்பவர் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.