கவரிங் நகைகளுக்கு தங்க முலாம் பூசி வங்கியில் அடகு வைத்து மோசடி எஸ்.ஐ. உட்பட 5 பேர் கைது: பெண் தொழிலதிபருக்கு தனிப்படை வலை
3/13/2023 5:49:25 PM
காரைக்கால்: தமிழகம் முழுவதும் கவரிங் நகைகளுக்கு தங்க முலாம் பூசி வங்கி, பைனான்ஸ், அடகு கடைகளில் அடகு வைத்து கோடி கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக பெண் தொழிலதிபரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்கால் ராஜாத்தி நகரை சேர்ந்தவர் கைலாஷ்(36). இவர் காரைக்காலில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் வந்த மர்மநபர், தன்னிடம் 12 பவுன் செயின் இருப்பதாகவும், அதை அடகு வைத்து பணம் தருமாறு கேட்டார்.
அந்த நபரிடம் நகையை கைலாஷ் வாங்கி சோதனை செய்ததில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து தனது சித்தப்பா பாலமுரளியை செல்போனில் தொடர்பு ெகாண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கடைக்கு வந்த பாலமுரளி, நகையை வாங்கி பரிசோதித்தார். அதில் நகை தங்க முலாம் பூசியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை பிடித்து காரைக்கால் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் காரைக்கால் சின்னக்கண்ணு செட்டித்தெருவை சேர்ந்த பரசுராம்(45) என்பதும், இந்த போலி நகையை விற்குமாறு திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில்(30) என்பவர் அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து பரசுராம், ரிபாத் காமிலை கைது செய்து விசாரித்தனர். அதில், புதுச்சேரி நிரவி காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜெரோம் ஜெசிமென்ட்(40), நேதாஜி நகரை சேர்ந்த தொழிலதிபர் புவனேஸ்வரி(35) மற்றும் ரமேஷ்(45), காரைக்கால் புதுத்துறையை சேர்ந்த முகமது மைதீன் ஆகியோருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. புவனேஸ்வரி, ஜெரோம் ஆகியோர் கோயம்புத்தூரிலிருந்து கவரிங் நகைகளை வாங்கி வந்து தங்க மூலாம் பூசி விற்பனை செய்ததுடன், போலி நகைகளை ரிபாத் காமில், பரசுராமிடம் கொடுத்து காரைக்கால்,
புதுச்சேரி மற்றும் தமிழக மாவட்டங்களில் உள்ள தேசிய மற்றும் தனியார் வங்கிகள், அடகு கடைகளில் வைத்து கோடிக்கணக்கில் பணம் பெற்றதும், இவர்களின் கீழ் மேலும் 10 பேர் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து ஜெரோம் ஜெசிமென்ட், ரமேஷ், முகமது மைதீன் ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர் 5 பேரையும் போலீசார் காரைக்கால் முதன்மை நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி நேற்றிரவு புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் எஸ்எஸ்பி லோகேஷ்வரன் உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைத்து புவனேஸ்வரி மற்றும் 10 பேரை தேடி வருகின்றனர்.
பெண் தொழிலதிபருடன் வசித்த எஸ்ஐ
காரைக்காலில் போலி நகை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட எஸ்ஐ ஜெரோம் ஜெசிமென்ட் கடந்த 3 ஆண்டுகளாக புவனேஸ்வரி வீட்டில் தங்கியுள்ளார். இதுகுறித்து போலீசில் ஜெரோம் ஜெசிமென்ட், புவனேஸ்வரி மீது ஜெரோம் ஜெசிமென்டின் மனைவி புகார் செய்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ததுடன் ஜெரோம் ஜெசிமென்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அன்று முதல் புவனேஸ்வரி வீட்டில் தான் ஜெரோம் தங்கி வந்தது தெரியவந்தது.