தகாத உறவை கைவிட மறுத்ததால் ஆத்திரம்; மாமியார், காதலனை டிராக்டர் ஏற்றி கொன்ற மருமகன்: கடலூர் அருகே பரபரப்பு
3/13/2023 5:47:37 PM
கடலூர்: தகாத உறவை கைவிட மறுத்த மாமியார் மற்றும் அவரது காதலன் மீது டிராக்டர் ஏற்றிக்கொலை செய்த மருமகன், டிராக்டருடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள தொளார் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மனைவி கொளஞ்சி(55). இவர்களுக்கு குழந்தையில்லை. கணவர் ராதாகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து சென்னை மார்க்கெட்டில் வேலை செய்து வந்த கொளஞ்சி ஐந்து வருடங்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்து கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இவரது தங்கை சித்ராவை பெரம்பலூர் மாவட்டம் சன்னாசிநல்லூர் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர். அங்கு அவர் இறந்து விட்டதால் அவரது மகள் சீத்தாவை(30) தன்னுடன் அழைத்து வந்து அதே கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் (36) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். அன்பழகன் கரும்பு டிராக்டர் ஓட்டி வருகிறார். இந்நிலையில் அன்பழகனின் உறவினரான செல்லத்துரை (55) என்பவருடன் கொளஞ்சி பழகி வந்துள்ளார். நாளடைவில் இது காதலாக மாறியது. அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.
இதையறிந்த அன்பழகன் மாமியார் கொளஞ்சியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அதனை கேட்காமல் தகாத உறவு தொடர்ந்துள்ளது. நேற்று நள்ளிரவும் கொளஞ்சி அவரது வீட்டுக்கு அருகில் உள்ள வேப்பூர் சாலையில் தனது மொபட் வாகனத்தில் சென்று சாலையோரம் நின்றபடி செல்லத்துரையிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதை பார்த்து ஆத்திரமடைந்த அன்பழகன் வீட்டிலிருந்த டிராக்டரை வேகமாக ஓட்டிச் சென்று கொளஞ்சியின் மீது ஏற்றி உள்ளார். இதில் கொளஞ்சி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இதைப் பார்த்து தப்பி ஓடிய செல்லதுரையை டிராக்டரில் விரட்டிச் சென்று அவர் மீதும் ஏற்றி உள்ளார். இதில் அவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதனையடுத்து அன்பழகன் மேற்கண்ட சம்பவத்தை தெரிவித்து ஆவினங்குடி காவல்நிலையத்தில் சரணடைந்தார். இவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிந்து டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட கொளஞ்சி, செல்லத்துரை ஆகியோரது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.