காதலனுடன் சேர்ந்து கணவனை எரித்து கொன்ற இளம்பெண்: புதுவையில் பயங்கரம்
3/12/2023 5:06:13 PM
புதுச்சேரி: புதுச்சேரி மூலக்குளம் ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் (28). லோடுமேனான இவருக்கு ஜனோவா மேரி (26) என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். குடிசை வீட்டில் இவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த 5ம் தேதி அதிகாலை சுமார் 3 மணியளவில் வீட்டில் பிரான்சிஸ் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் திடீரென 2 மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பிரான்சிஸ் மீது பெட்ரோல் பாட்டிலை வீசி தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பியோடி விட்டனர்.
இதில் உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில், வலி தாங்க முடியாமல் பிரான்சிஸ் அலறி துடித்தார். அலறல் சத்தத்தை கேட்ட அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் பிரான்சிஸ் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து, அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து வந்த ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனிடையே பிரான்சிஸ் மனைவி மீது ேபாலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பிரான்சிஸ் மனைவி ஜனோவா மேரிக்கும், அதே பகுதியை சேர்ந்த பிளம்பர் கணேசன் (26) என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கணவர் பிரான்சிஸ் இல்லாத நேரத்தில் ஜனோவா மேரியும், கணேசனும் தனிமையில் இருந்துள்ளனர். இந்த விவகாரம் பிரான்சிஸ்க்கு தெரியவந்தபோது, அவர் மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர்கள் தகாத உறவை தொடர்ந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் காதலுக்கு இடையூறாக இருந்து வரும் பிரான்சிஸை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர். அதன்படி கடந்த 5ம் தேதி பிரான்சிஸ் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவர் மீதும், அவர் படுத்திருந்த இடத்தை சுற்றியும் ஜனோவா மேரி, கணேசன் ஆகியோர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளனர்.
அப்போது பிரான்சிஸ் வலியால் அலறி துடித்தபோது அக்கம் பக்கத்தினர் வந்ததால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த ஜனோவா, கணேசனை அங்கிருந்து செல்லும்படி கூறிவிட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினரிடம், 2 பேர் பிரான்சிஸ் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றதாக நாடகமாடியுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர். இதையடுத்து போலீசார் ஜனவோவையும், கணேசனையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.