ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரி முதல்வர் மீது மாணவிகளின் பாலியல் புகார்கள் குவிகின்றன: ஆபாச வீடியோக்கள், குறுஞ்செய்திகள் சிக்கியதால் பரபரப்பு
3/12/2023 4:59:33 PM
சென்னை: மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதான ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம்மீது, பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது பயிற்சி பெற்று வரும் மாணவிகள் பலர் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்து வருவதால், அவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மிகவும் பழமையான உடற்பயிற்சி கல்லூரியான சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 500க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். குறிப்பாக மாணவிகள் தான் அதிகளவில் உடற்பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த கல்லூரியின் முதல்வராக கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜார்ஜ் ஆபிரகாம்(50) பணியாற்றி வந்தார். இவர், விளையாட்டு போட்டிகளில் ஆசிய, இந்திய அளவில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்கள் பெற்றுள்ளார். மேலும், ஆணழகன் போட்டியிலும் மாவட்ட அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் முதல்வராக பணியாற்றி வரும் காலத்தில் தான் அதிகளவில் தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த போட்டிகளில் மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கல்லூரி விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்த மாணவி ஒருவர், முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது,’பயிற்சி என்ற பெயரில் பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்’ என அளித்த புகாரின்பேரில் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. அதைதொடர்ந்து முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் முதல்வர் அந்த வழக்கில் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று கைதாவதில் இருந்து தப்பினார்.
இதற்கிடையே, கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவி ஒருவரை முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் தனியாக அழைத்து, ‘சிறப்பு பயிற்சி’ என்ற பெயரில் மாணவியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி ஒய்எம்சிஏ கல்லூரி நிர்வாகத்திடம் கூறி அழுதுள்ளார். பிறகு கல்லூரி நிர்வாகம், கல்லூரியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று ஆய்வு செய்த போது, முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் சம்பவத்தன்று மாணவியை தனியாக உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்து செல்வது, பிறகு அந்த மாணவி அழுதபடி வெளியே வரும் காட்சிகள் இருந்தது. அதைதொடர்ந்து கல்லூரி நிர்வாகம் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
அந்த புகாரின் படி அனைத்து மகளிர் போலீசார், முதல்வரை நேரில் அழைத்து விசாரணை நடத்தியதில், 17 வயது மாணவியை உடற் பயிற்சி கூடத்திற்கு தனியாக அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதைதொடர்ந்து முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாமை போலீசார் கைது செய்ததால், அவரால் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது கல்லூரியில் படித்து வரும் மாணவிகள் என 10க்கும் மேற்பட்ேடார் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி நிர்வாகத்திடம் இ-மெயில் மூலமாகவும், புகார் கடிதம் மூலமாகவும் பாலியல் புகார் அளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
புகார் அளித்த முன்னாள் மற்றும் தற்போது கல்லூரியில் படித்து வரும் மாணவிகள் அனைவரும், முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் தங்களுக்கு அனுப்பிய ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆபாச குறுஞ்செய்திகளை ஆதாரமாக அனுப்பி உள்ளனர். அதில், முன்னாள் மாணவிகள் சிலர், சக மாணவிகளுடன் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் நெருக்கமாக இருந்த வீடியோக்களை அனுப்பி தங்களை ஆசைக்கு இணங்க தொந்தரவு செய்ததாக ஒய்எம்சிஏ நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது முன்னாள் மற்றும் தற்போது பயிற்சி மேற்கொண்டு வரும் மாணவிகளின் புகார்களை ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி நிர்வாக குழுவினர் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாமை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதேநேரம், முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம், மாணவிகளுக்கு அனுப்பிய ஆபாச வீடியோக்கள், ஆபாச குறுஞ்செய்திகள் ஆதாரமாக போலீசாரிடம் சிக்கியுள்ளதால், அடுத்தடுத்த வழக்குகளில் அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.