பொன்னேரி அருகே பயங்கரம்; தனியார் நிறுவன ஊழியர் அடித்து கொலை: ரயில்வே கேட் அருகே சடலம் மீட்பு
3/11/2023 5:57:43 PM
பொன்னேரி: மீஞ்சூர் அருகே நந்தியம்பாக்கம், பெரிய தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகன்கள் பாலமுருகன், குமார், ஜெய்சங்கர், மகள்கள் சுசிலா, மாலா. இவர்களில் சுசிலாவை, பொன்னேரி அருகே ஆலாடு பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். முனுசாமி-சுசிலா தம்பதியின் மகள் அம்மு. இவரை சுசிலாவின் சகோதரன் பாலமுருகனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். சமீபத்தில் தனியார் நிறுவத்தில் வேலை பார்த்து வந்த முனுசாமி இறந்து விட்டார். அந்த வேலை, பாலமுருகனுக்கு வழங்கப்பட்டது. கணவர் இறந்து போனதால், தாய் வீடான நந்தியம்பாக்கத்தில் தங்கினார் சுசிலா. பாலமுருகனும், அம்முவும் என்ஜிஓ நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்தனர்.
இந்நிலையில், சுசிலாவின் மகன் ராபர்ட்டுக்கு சொத்து பிரச்னை இருந்துள்ளது. அதனால் தான் வசிக்கும் வாடி பகுதிக்கு வரும்படி நேற்றிரவு பாலமுருகனை உதவிக்கு அழைத்துள்ளார். உடனே அவரும் சென்றுள்ளார். இந்நிலையில், நள்ளிரவு பொன்னேரி அருகே ஆலாடு ரயில்வே கேட் அருகே பாலமுருகன் தலையில் அடிபட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே பாலமுருகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து பொன்னேரி போலீசார் விரைந்து சென்று பாலமுருகனின் சடலத்தை கைப்பற்றி, அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து பொன்னேரி டிஎஸ்பி கிரியாசக்தி, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நிர்மலா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆலாடு பகுதியில் சொத்து தகராறு காரணமாக ராபர்ட் மற்றும் மற்றொரு தரப்பினரிடையே அடிதடி தகராறு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நேற்றிரவு ராபர்ட்டுக்கு ஆதரவாக சமரசம் பேசவந்த பாலமுருகனை மற்றொரு தரப்பினர் அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதற்கு பிறகுதான், சொத்து தகராறு காரணமாக பாலமுருகன் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என தெரியவரும் என்று ேபாலீசார் தெரிவித்தனர்.