2வது திருமண ஆசை காட்டி சென்னை தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் அபேஸ் செய்த இளம்பெண் கைது: வலையில் வீழ்த்தியது குறித்து பரபரப்பு தகவல்கள்
3/11/2023 5:49:04 PM
அலங்காநல்லூர்: மனைவியை பிரிந்த சென்னை ரியல் எஸ்டேட் அதிபரிடம் இரண்டாம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக, மதுரையை சேர்ந்த இளம்பெண், இதற்கு துணையாக இருந்த அவரது நண்பர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்தவர் ராம்பாலாஜி (36). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், மனைவியை பிரிந்து மகனுடன் வசித்து வருகிறார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்தவர் வித்யா (27). இவரும் கணவரை பிரிந்து வாழ்கிறார். ராம்பாலாஜிக்கும், வித்யாக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நட்பாக மாறியது.
அடிக்கடி ராம்பாலாஜியை போனில் தொடர்பு கொண்ட வித்யா இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக அவரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதன் காரணமாக பல்வேறு தவணைகளாக ரொக்கப்பணம் மற்றும் நகைகளை ரூ.50 லட்சம் மதிப்பில் வித்யா வாங்கியுள்ளார்.
இந்நிலையில், ராம்பாலாஜி திருமணம் குறித்து பேசும்போதெல்லாம் வித்யா சிறிது நாட்கள் ஆகட்டும் என கூறி தவிர்த்து வந்துள்ளார். இதற்கிடையே திடீரென அவர் செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு மாயமானார். வித்யா மோசடி செய்ததை அறிந்த ராம்பாலாஜி, இது குறித்து மதுரை எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வித்யாயை அழைத்து விசாரணை செய்ததில், தனது தந்தையின் நிலத்தை விற்று பணத்தை கொடுத்து விடுவதாக உறுதியளித்த அவர், அதற்கு 5 மாத அவகாசம் கேட்டுள்ளார்.
இருப்பினும் பணத்தை திருப்பிக்கொடுக்காமல், அவரது நெருங்கிய நண்பரான அஜித் (29) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இதையறிந்த ராம்பாலாஜி அவர்கள் இருவரும் சேர்ந்து தன்னை மோசடி செய்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும், வாடிப்பட்டி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரணை முடிவில், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த அலங்காநல்லூர் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து வித்யா, அஜித் மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் இருவரையும் நேற்று கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக கூறி சென்னை தொழிலதிபரிடம் மதுரையை சேர்ந்த இளம்பெண் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.