ஆவடி அருகே ரவுடி கொலை வழக்கில் 8 பேர் கைது: விசாரணையில் ‘திடுக்’ தகவல்கள்
3/8/2023 6:30:22 PM
ஆவடி: ஆவடி அருகே முன்விரோத தகராறில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு ரவுடி மர்ம கும்பலால் சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக நேற்று 8 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஆவடி அருகே பொத்தூர், வள்ளிவேலன் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (32). பெயின்டர். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு முன் யோகேஸ்வரன் ரவுடியாக வலம் வந்தபோது, அவர்மீது ஆவடி உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையே, கடந்த 5ம் தேதி இரவு ரவுடி யோகேஸ்வரன் வீட்டில் இருந்தபோது, அவரை ஒரு மர்ம கும்பல் சுற்றி வளைத்து, மீன் வெட்டும் கத்தியால் சரமாரி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இதைத் தடுக்க வந்த யோகேஸ்வரனின் மனைவியையும் அக்கும்பல் கீழே பிடித்து தள்ளியது. இத்தாக்குதலில் ரவுடி யோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், இறந்துபோன ரவுடி யோகேஸ்வரனுக்கும் மீன் வியாபாரி சுறா என்பவருக்கும் இடையே ஏற்கெனவே தொழில் போட்டி இருந்து வந்திருக்கிறது. இதனால் கடந்த 2016ம் ஆண்டு மீன் வியாபாரி சுறாவை தனது நண்பருடன் சேர்ந்து ரவுடி யோகேஸ்வரன் வெட்டி கொலை செய்துள்ளார். இதற்கு பதிலடியாக ரவுடி யோகேஸ்வரனை பழிக்கு பழியாக மர்ம கும்பல் வெட்டி கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், ரவுடி யோகேஸ்வரன் கொலை வழக்கு தொடர்பாக 6 பேர் நேற்று உயர்நீதிமன்றத்தில் சரணடைய செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அம்பத்தூர் அருகே பாடி ரவுன்டானா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த 6 பேரையும் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் பொத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த கூட்டாளிகளான அப்பு (எ) சந்துரு (19), திருவேற்காடு மணிமாறன் (30), கொளத்தூர் செல்வகுமார் (20), வில்லிவாக்கம் மஞ்சுநாதன் (21), தாம்பரம் முத்து (18) எனத் தெரியவந்தது. மேலும், இவர்கள் மீன் வியாபாரி சுறாவின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் ரவுடி யோகேஸ்வரனை சரமாரி வெட்டி கொன்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், இவ்வழக்கு தொடர்பாக வில்லிவாக்கம் பாரதிராஜா (23), விக்கி (எ) ரிபாஸ் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் 8 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 7 பேரை சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
இதில், முதலில் பிடிபட்ட 6 பேரும் கடந்த 2016ம் ஆண்டு ரவுடி யோகேஸ்வரனால் கொலை செய்யப்பட்ட மீன்வியாபாரி சுறாவின் மகன் மற்றும் உறவினர்கள் என்பது தெரியவந்தது. மேலும், பொத்தூர் பகுதியில் மீன் வியாபாரி சுறாவின் குடும்பத்தினர் புதிய வீடு கட்டியுள்ளனர். அந்த வீட்டில் நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதை பார்த்துவிடலாம் என ரவுடி யோகேஸ்வரன் மிரட்டி வந்துள்ளார். இதில் ஆத்திரமான சுறாவின் குடும்பத்தினர், பழிக்குப் பழியாக ரவுடி யோகேஸ்வரனை சரமாரி வெட்டி கொன்றுள்ளனர் என தெரியவந்தது.