ஆறி போன டீ கொடுத்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம்; இரும்பு கம்பியால் அடித்து மாமியார் படுகொலை: மருமகள் கைது
3/8/2023 6:26:58 PM
விராலிமலை: புதுகை மலைக்குடிபட்டியில் ஆறி போன டீ கொடுத்ததை தட்டி கேட்ட மாமியாரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மருமகள் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த மலைக்குடிபட்டியை சேர்ந்த விவசாயி வேலு. இவரது மனைவி பழனியம்மாள் (75). இவர்களுக்கு சுப்பிரமணி என்ற மகனும் 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. சுப்பிரமணியின் மனைவி கனகு (42). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மகன், மருமகளுடன் கூட்டு குடும்பமாக வேலு- பழனியம்மாள் வசித்து வருகின்றனர். கனகு சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு மருமகளிடம் பழனியம்மாள் டீ கேட்டுள்ளார். அவரும் டீ போட்டு கொண்டு வந்து கொடுத்தார். டீயை வாங்கிய பழனியம்மாள், ‘டீ ஏன் ஆறிபோய் உள்ளது’ என கேட்டு திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கனகு, அருகில் கிடந்த சைக்கிள் பழுது நீக்கும் இரும்பு (ராடு) கம்பியை எடுத்து பழனியம்மாளை தலையில் ஓங்கி அடித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் பழனியம்மாள் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு பழனியம்மாள் இறந்தார்.
இதுகுறித்து வேலு அளித்த புகாரின்பேரில் இலுப்பூர் போலீசார் விரைந்து சென்று, பழனியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கனகுவை கைது செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.