குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
4/16/2014 3:10:58 PM
தானே:குஜராத் மாநிலத்தில் 7ம் வகுப்பு பாட புத்தகத்தில் சத்ரபதி சிவாஜி குறித்து தவறான தகவல் வெளியிட்டதற்காக மாநில முதல்வர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் 7ம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் முகலாயர்கள் பற்றிய அத்தியாயத்தில் சத்ரபதி சிவாஜி பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இதில் அவர் பிறந்த இடம், பிறந்த தேதி, ஆசான் குறித்த தகவல்கள் தவறாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
குஜராத் மாநில பள்ளி பாட புத்தக வாரியம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தில் முகலாய மன்னர்கள் குறித்து சரியான தகவல்களும் இந்து மன்னர் சிவாஜி குறித்து தவறான தகவல்களும் வெளியிடப்பட்டிருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மோடியை கண்டித்து நேற்று தானேவில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் கண்டன பொது கூட்டம் நடைபெற்றது. முன்னதாக மோடியின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. இது குறித்து தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜிதேந்திரா ஆவாத் கூறுகையில், இந்தியாவின் வரலாறு குறித்து மோடி தொடர்ந்து தவறு செய்து வருகிறார். இதற்காக இந்திய மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.