5 ஆண்டு பி.எல். படிப்புக்கு 15ல் கவுன்சலிங் தொடக்கம்
7/10/2013 2:20:25 PM
சென்னை:அரசு சட்டக் கல்லூரிகளில் நடத்தப்படும் 5 ஆண்டு பி.ஏ., பி.எல் பட்டப்படிப்புக்கான கவுன்சலிங், வரும் 15&ம் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 6 அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு பி.ஏ.,பி.எல் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. ஒற்றைச் சாளர முறையின் கீழ் நடக்கும் இந்த மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல், பல்கலை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த கல்லூரிகளின் தகவல் பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட படிப்புக்கு தகுதியுள்ள மாணவ, மாணவியருக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கான கவுன்சலிங், வரும் 15&ம் தேதி தொடங்கி 19&ம் தேதி வரை நடக்கிறது. அழைப்பு கடிதம் கிடைக்க பெறாதவர்கள் கவுன்சலிங் நடத்தும் தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொண்டு அழைப்பு கடிதங்களை பெற்று கவுன்சலிங்கில் கலந்து கொள்ளலாம். சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாத்தில் உள்ள அரங்கில் 15&ம் தேதி காலை 9 மணிக்கு கவுன்சலிங் தொடங்கும்.
கவுன்சலிங் விவரம்:
ஓ.சி. பிரிவினரில் 88.50 முதல் 85.25 வரை கட் ஆப் பெற்றுள்ளவர்களுக்கு 15&ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கவுன்சலிங் நடக்கும். ஓ.சி. பிரிவினரில் காத்திருப்போரில் 83.62 வரை கட் ஆப் பெற்றவர்கள், எஸ்.டி., எஸ்.சி. (அருந்ததியர்), எஸ்.சி. (மற்றவர்கள்), எம்.பி.சி., பி.சி. (முஸ்லிம்), பி.சி. (மற்றவர்கள்) 81.62 முதல் 79.62 வரை கட் ஆப் பெற்றவர்களுக்கு 16&ம் தேதி நடக்கிறது. பொதுப் பிரிவினருக்கு 17 முதல் 19&ம் தேதி வரை கவுன்சலிங் நடக்கும்.