மிர்ஜா ஹாஜி மஸ்தான் வாழ்க்கை படமாகிறது : மீண்டும் மும்பை டான் ஆகிறார் ரஜினி?
4/21/2017 3:13:58 PM
ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தை இயக்கிய பா.ரஞ்சித் மீண்டும் அவர் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். மலேசியா டான் கதையாக கபாலி உருவானது. அடுத்த படமும் டான் கதையாகவே அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஸ்கிரிப்ட் பணி முற்றிலும் முடிந்துவிட்டது. தயாரிப்புக்கான ஏற்பாடுகளை நடிகர் தனுஷ் செய்து வருகிறார். ரஜினியின் பாட்ஷா மறக்க முடியாத படமாக அமைந்தது. அதுபோல் இப்படமும் ரஜினியின் மறக்கமுடியாத பட பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று இயக்குனர் எண்ணியுள்ளார்.
இதற்காக கதைக்களத்தை மும்பையிலேயே அமைக்க உள்ளாராம். மும்பையில் மிகப்பெரிய டானாக வலம்வந்த தமிழர் மிர்ஜா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை மையப்படுத்தி இக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 1926-1994 இடைப்பட்ட காலத்தில் மும்பையில் மக்கள் தலைவராகவும், டானாகவும் வலம் வந்தவர் ஹாஜி மஸ்தான்.
கடத்தல்காரராகவும், சினிமா படங்களுக்கு பைனான்ஸ் செய்பவராகவும், ரியல் எஸ்டேட் அதிபராகவும் வலம் வந்த இவர் சரளமாக தமிழ் பேசக்கூடியவர். எப்போதும் வெள்ளை நிற உடை, வெள்ளை நிற காலணிகள் மட்டுமே அணிவதுடன், விலை உயர்ந்த சிகரெட்தான் புகைப்பாராம். வெள்ளைக் கலர் மெர்சிடிஸ் கார்தான் உபயோகிப்பாராம். இந்த கெட்டப்பில் ரஜினியின் தோற்றத்தை இப்போதே ரசிகர்கள் கற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், ரஞ்சித் தரப்போ, ‘ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவில்லை’ என்கிறது.