ஸ்ருதி கால்ஷீட்டுக்கு கமல் வெயிட்டிங்
4/19/2017 3:39:42 PM
கமல் கால்ஷீட்டுக்காக இயக்குனர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் தனது மகள் ஸ்ருதி கால்ஷீட்டுக்காக தற்போது கமல் காத்திருக்கிறார். சபாஷ் நாயுடு படம் இயக்கி நடிக்கிறார் கமல். இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் முதல்கட்டமாக முடிந்து சென்னையில் 2ம்கட்ட படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் கமல் மாடிபடியிலிருந்து விழுந்து கால் எலும்பு முறிந்தது. கடந்த 5 மாதத்துக்கும் மேலாக ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது எலும்பு முறிவு முற்றிலும் குணம் அடைந்து சகஜ நிலைக்கு திரும்பியிருக்கும் கமல் நடிப்பதற்கும் ஏற்ற உடற்தகுதி பெற்றுவிட்டார். இதையடுத்து சபாஷ் நாயுடு படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார். ஆனால் ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் மாறி மாறி நடித்துக்கொண்டிருப்பதால் அவரால் இப்படத்துக்கு உடனடியாக கால்ஷீட் ஒதுக்கி தர முடியவில்லை. அவரது கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார் கமல். இதுகுறித்து கமல் கூறும்போது,’சபாஷ் நாயுடு படத்துக்கு இன்னும் சில வாரங்களுக்கான படப்பிடிப்பு மட்டும் பாக்கி உள்ளது. இந்தியா மற்றும் வெளிநாட்டில் இது நடக்க உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் படப்பிடிப்பை முடிக்க எண்ணி உள்ளேன். ஹாலிவுட் நடிகர், நடிகைகள் சிலரும் நடிக்க உள்ளனர். ஸ்ருதி பிஸியாக வேறு படங்களில் நடித்து வருகிறார். அவரும் விரைவில் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்’ என்றார்.