ஆழ்கடலில் சுறாவுடன் நீந்திய ஸ்ரேயா
4/18/2017 4:53:38 PM
டிஸ்கவரி சேனலில் ஆபத்தான திமிங்கலம் மற்றும் சுறா மீன்களுடன் நீச்சல் வீரர்கள் நீந்தும் காட்சிகள் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். அதுபோன்ற காட்சிகள் ஸ்ரேயா மனதில் துணிச்சலை ஏற்படுத்தியது. தானும் சுறாக்களுடன் நீந்த வேண்டும் என்று நீண்டகாலமாக ஆசைப்பட்டு வந்தார். ஏற்கனவே அவர் கடலுக்கடியில் நீந்தும் பயிற்சிகள் பெற்றிருப்பதால் எப்படியாவது தனது எண்ணத்தை நிறைவேற்ற எண்ணினார். சமீபத்தில் மாலத்தீவு சென்றார் ஸ்ரேயா. அங்குள்ள கடல் பகுதியில் தனது எண்ணத்தை நிறைவேற்ற முடிவு செய்து அதற்கான நீச்சல் கவச உடைகளுடன் கடலில் குதித்து சுறாக்களுடன் பயமின்றி நீந்தி மகிழ்ந்தார். இதுபற்றி அவர் கூறும்போது,’தனியாக கடலுக்கு நடுவே படகு செலுத்திச் சென்றேன். பிறகு கடலில் குதித்து ராட்சத திமிங்கலம் மற்றும் சுறா மீன்களுடன் நீண்ட நேரம் நீந்தியபடி விளையாடினேன். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. தவிர இரவு நேரத்திலும் கடலில் குதித்து நீந்தியபடி இருந்தேன். அங்கிருந்து திரும்பி வரும் எண்ணமே எனக்கு வரவில்லை. அவ்வளவு ஜாலியாக இருந்தது’ என்றார்.