உடல் சூட்டை தணிக்கும் நன்னாரி சர்பத்
3/31/2017 3:12:30 PM
நமக்கு எளிதிலே, மிக அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள், கடைத்தெருவிலே கிடைக்கின்ற கடை சரக்குகள், உணவு பொருட்களை கொண்டு இயற்கை மருந்து தயாரிப்பது மற்றும் உணவாக பயன்படுத்துவது குறித்து பார்த்துவருகிறோம். அந்த வரிசையில் இன்று உடல் உஷ்ணத்தை தணித்து கோடை கால வெப்ப சலனங்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக நன்னாரி, ஜவ்வரிசி, பாதாம் பிசின் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். நன்னாரிவேரிலும் அதன் காய்ந்த தண்டுகளிலும் உடலின் உஷ்ணத்தை போக்கும் தன்மை உள்ளது. வாதுமை(பாதாம்) பிசின் உள்ளுறுப்புகளை குளிர்ச்சியடைய செய்கிறது. தோலில் ஏற்படும் சொரி, சிரங்கு, புண், காயங்களுக்கு மேல்பூச்சு மருந்தாகிறது. நல்ல சத்தூட்டமான இந்த உணவு, ஆண் மலட்டு தன்மையை நீக்கி விந்து உற்பத்தியை பெருக்குகிறது. காய்ச்சலின் போது உடல் சூட்டை தணிக்க பயன்படுத்தும் ஜவ்வரிசி வள்ளிகிழங்கில் இருந்து தயாரிக்கப்படுவது. இதனை நீரில் ஊறவைத்து வேகவைத்து, அந்த நீரை பருகும்போது, சிறுநீரக தாரைகளில் ஏற்படுகின்ற எரிச்சல் நீங்குவதோடு, மலச்சிக்கலை சரிசெய்கிறது. புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. உடலுக்கு குளிர்ச்சி தரும் நன்னாரி சர்பத்:
தேவையான பொருட்கள்: நன்னாரி பொடி, பனங்கற்கண்டு, நீர்.
பாத்திரத்தில் நீர் ஊற்றி, நன்னாரி பொடி, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க விடவும். இந்த சர்பத்தில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கும்போது உடலின் வெப்பம் தணிந்து எரிச்சல் நீங்குகிறது. நன்னாரி பொடி கலந்த சிரப் தயாரித்து வைத்துக்கொண்டு தேவைப்படும்போது, அதில் நீர் சேர்த்து சர்பத் போல் குடித்து வரலாம். நன்னாரி குளிர்ந்த தன்மையை உடலுக்கு தருகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சிறுநீரக கற்களை கரைய செய்ய வல்லது. இதனுடன் எலுமிச்சை சேர்த்து சாப்பிடும் போது கோடை வெயிலின் அத்தனை நோயில் இருந்தும் காக்கிறது. உடலுக்கு குளிர்ச்சி தரும் ஜவ்வரிசி உணவு வகைகள்: தேவையான பொருட்கள்: வேகவைத்த ஜவ்வரிசி, தயிர், கொத்தமல்லி, பெருங்காயம், உப்பு. ஒரு சிறிய பாத்திரத்தில் தேவையான அளவு வேகவைத்த ஜவ்வரிசி, உப்பு, பெருங்காயப்பொடி, கொத்தமல்லி இலை, தயிர் ஆகியன சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும். இதனை தினமும் மதிய உணவு வேளையின் போது பச்சடியாக 2 ஸ்பூன் எடுத்து வருவதால் வயிற்று சூடு தணிந்து உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும்.
ஜவ்வரிசியுடன் இனிப்பு மற்றும் பால் சேர்த்த உணவு செய்முறை: தேவையான பொருட்கள்: வேகவைத்த ஜவ்வரிசி, பால், வெல்லம், பீட்ரூட் அல்லது ரோஜா சர்பத்.
சிறிய பாத்திரத்தில் ஜவ்வரிசி, பீட்ரூட் சிரப் அல்லது ரோஜா சர்பத், வெல்லம் சேர்த்து கிளறவும். இந்த கலவையுடன் பால் சேர்த்து பரிமாறலாம்.
ஜவ்வரிசி நோயாளிகளுக்கு பத்திய உணவாக பயன்படுத்துகின்ற உணவு. தயிருடன் ஜவ்வரிசி, உப்பு சேர்த்து உணவாக சாப்பிடும்போது அல்சருக்கு சிறந்த மருந்தாகிறது. வயிற்று எரிச்சலை தணிக்கிறது. சிறுநீரை பெருக்குகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இதேபோல் ஜவ்வரிசியுடன் பீட்ரூட் சாறு சேர்த்து குழந்தைகளுக்கு வழங்குவதால் சத்துக்கள் அனைத்தும் உடலில் சேருவதோடு, உடலுக்கு நல்ல பலத்தை தருகிறது. பாதாம் பிசினை பயன்படுத்தி குளிர்ச்சி தரும் உணவு பொருள்: தேவையான பொருள்: பாதாம், குங்குமப்பூ, ஏலக்காய் சேர்ந்த கலவை, பாதாம் பிசின், வெல்லம், காய்ச்சிய பால். பாதாம் பிசின் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை இரவு தூங்க செல்லும் போது ஊறவைத்து காலையில் எடுக்கும்போது மிகவும் மிருதுவான நிலைக்கு மாறிவிடும். இதனுடன் பாதாம், குங்குமப்பூ, ஏலக்காய் சேர்த்த பொடி கலவை 1 ஸ்பூன், வெல்லம், பால் சேர்த்து ஊட்டசத்து நிறைந்த இனிப்பு பானமாக குடிக்கலாம். உடல் உஷ்ணம் காரணமாக உண்டாகும் ரத்த அழுத்த குறைபாடு மற்றும் தோல் நோய்களுக்கு இந்த பாதாம் பிசின் சிறந்த மருந்தாகிறது.