வயிற்று புழுக்களை வெளியேற்றும் சுண்டைக்காய்
3/22/2017 2:29:30 PM
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சுண்டைக்காயின் பயன்கள் குறித்து பார்க்கலாம். சுண்டைக்காய் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. நெஞ்சக சளியை கரைத்து வெளித்தள்ள கூடியது. இதயம், நுரையீரலில் தோன்றும் நோய்களை போக்கும் தன்மை உடையது. செரிமானத்தை தூண்டக் கூடியது. வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளித்தள்ளக் கூடியது. வாயுவை அகற்றவல்லது. சீத கழிச்சலுக்கு மருந்தாகிறது. உணவுக்கு சுவை, உடலுக்கு ஆரோக்கியம் சேர்ப்பதாக சுண்டைக்காய் விளங்குகிறது. சுண்டைக்காயை பயன்படுத்தி பொரியல் செய்யலாம். தேவையான பொருட்கள்: சுண்டைக்காய், வேர்க்கடலை, பூண்டு, மிளகாய், நல்லெண்ணெய், கடுகு. செய்முறை: வேர்க்கடலை, ஒரு பல் பூண்டு, ஒரு மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு போடவும். இதனுடன் சுண்டைக்காய் போட்டு லேசாக வதக்கவும். பின்னர், வேர்க்கடலை கலவையை சேர்த்து கலக்கவும்.
இது, அதிக கசப்பில்லாத சுவையான உணவாகிறது. சுண்டைக்காய்களை பயன்படுத்தும் முன்பு அதை நசுக்கி தண்ணீரில் போட்டு வைத்தால், விதைகள் வெளியேறும். கசப்பு தன்மை குறையும். சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் வயிற்றுபோக்கு ஏற்படாது. சீதபேதியை போக்க கூடியது. இது சிறிய காயாக இருந்தாலும் அற்புதமான நன்மைகளை கொண்டது. சுண்டைக்காய்களை கொண்டு வயிற்று புழுக்களை அகற்றும் ரசம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சுண்டைக்காய், கடுகு, நல்லெண்ணெய், பூண்டு, மஞ்சள் பொடி, மிளகுப்பொடி, உப்பு, புளிக்கரைசல்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும், பூண்டு பற்கள், நசுக்கிய சுண்டைக்காய் போடவும். இதில், தண்ணீர்விட்டு மஞ்சள் பொடி, மிளகு பொடி, உப்பு, சிறிது புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை சாப்பிட்டு வர குடலில் உள்ள கிருமிகள் அழியும். வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். நல்ல பசி எடுக்கும். சுண்டைக்காயை வாரம் இருமுறை பச்சையாக அல்லது வற்றலாக சேர்த்து கொள்ளலாம்.
சுண்டைக்காயை பயன்படுத்தி நெஞ்சக சளி, இருமலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். சுண்டைக்காய் செடியின் துளிர் இலைகள், பிஞ்சு, பூ ஆகியவற்றை சுத்தப்படுத்தி ஒரு கைப்பிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் மிளகுப்பொடி, உப்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி 50 மில்லி அளவுக்கு காலை, மாலை குடித்துவர இருமல், சளி சரியாகும். சுண்டைக்காய் செடியின் இலை, பூக்கள், பிஞ்சு, காய், வேர் என அனைத்து பாகங்களும் மருந்தாகி பயன்தருகிறது. இலைகள் காய்ச்சலை போக்கும் தன்மை கொண்டது. நெஞ்சக சளியை கரைக்கும். பூச்சிகொல்லியாக விளங்குகிறது. இதை பயன்படுத்திவர காய்ச்சல் காணாமல் போகும். இருமல் குணமாகும். சுண்டைக்காய் இலைகளை அரைத்து மேல் பற்றாக போடும்போது படை, சொரி, சிரங்கு குணமாகும். வற்றலாக கடைத்தெருவில் கிடைக்க கூடிய இது ஆரோக்கியத்தை தரக்கூடியது. ஈரலை பலப்படுத்தவல்லது. யானைக்காலால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தும் மருத்துவத்தை பார்க்கலாம். பப்பாளி பழத்தின் சதையை மட்டும் எடுத்து கூழாக நசுக்கி நெல்லிக்காய் அளவு வெயிலில் வைத்தால், அது சுண்டைக்காய் அளவுக்கு மாறும். இதை காலை, மாலையில் சாப்பிட்டு வர யானைக்காலால் ஏற்படும் காய்ச்சல், நெறிக்கட்டுதல், கால் சிவந்து போகுதல், வீக்கம் ஆகியவை குணமாகும்.