ரத்த கொழுப்பை கரைக்கும் வெங்காயம்
3/14/2017 2:14:14 PM
நமக்கு எளிதிலே மிக அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள் மற்றும் வீட்டு சமையலறையில் கிடைக்கின்ற பொருட்களை கொண்டு மருந்து தயாரிப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று உணவே மருந்தாகும் வெங்காயம் மற்றும் அதன் சிறந்த மருத்துவ பயன்கள் குறித்து பார்க்கலாம். வெங்காயத்தில் இரு வேறு சுவைகள் உள்ளன. வெள்ளை, சிவப்பு ஆகிய இரு வண்ணங்களில் பெரிதும் சிறிதுமாக இருந்தாலும் இவற்றின் மருத்துவ குணங்கள் ஒரே மாதிரியாக காணப்படுகிறது. இத்தகைய பலன் கொண்ட வெங்காயம், இயற்கை மருந்து தயாரிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க செய்து காய்ச்சலை குணப்படுத்துகிறது. உள் உறுப்புகளுக்கு நல்ல பலம் தருகிறது. சிறுநீர் பெருக்கியாக இருந்து உடல் வீக்கத்தை நீக்க செய்கிறது. பெண்களுக்கு மாதவிலக்கை தூண்ட செய்து, உடலில் கெட்ட ரத்தத்தை அகற்றுகிறது.
இது காமத்தை தூண்ட செய்யும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. விந்து உற்பத்தி மற்றும் உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரிப்பது போன்றவற்றுக்கு வெங்காயம், வெங்காய விதை உதவுகிறது. வெங்காயம் சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாகிறது. இதனை வேகவைக்காமல் பச்சையாக தினமும் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
வெங்காயத்தை பயன்படுத்தி வயிற்று கடுப்பு, சீதகழிச்சல், கழிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு மருந்து தயாரிப்பு:
தேவையான பொருட்கள்: நெய், வெங்காயம், மிளகு பொடி, சீரகப்பொடி, சாதம், உப்பு. வாணலியில் நெய்விட்டு வெங்காயத்தை வதக்கவும், பின்னர் அதனுடன் மிளகுப்பொடி மற்றும் சீரகப்பொடி சேர்க்கவும். அதனுடன் சாதம் சேர்த்து உண்பதால், உணவு எளிதில் செரிமானம் ஆகிறது. வயிற்று கோளாறுகளை சரிசெய்கிறது. ‘அல்லிசின்’ என்ற வேதிப்பொருள் மிகுதியாக உள்ள வெங்காயத்தில் புண்களை ஆற்றும் தன்மையும், நுண்கிருமிகளான பாக்டீரியா, வைரசின் தாக்கத்தையும் நீக்குகிறது. இதேபோல் வயிற்று போக்கு, மூலக்கடுப்பு ஆகிய சமயங்களில் வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி அதனுடன் மிளகு, சீரகம் சேர்த்து சாப்பிடலாம்.
விந்தணு குறைப்பாட்டை சரிசெய்யும் மருந்து: தேவையான பொருட்கள்: வெங்காயச் சாறு, தேன். வெங்காயத்தை சிறிதாக நறுக்கி அரைத்து சாறு எடுத்து கொள்ளவும். அதனுடன் சமஅளவு தேன் சேர்த்து மிதமான தீயில் சிரப் பதத்தில் காய்ச்சி எடுக்கவும். தினமும் 2 ஸ்பூன் அளவு வெங்காய சிரப்புடன், சிறிது அளவு தண்ணீர் சேர்த்து சர்பத் போல் குடிப்பதால் உடல் சூடு தணியும். மேலும் விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. மேலும் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைபாடு, உடலில் இருக்கின்ற விந்தணுக்கள் பயணிக்கின்ற கால குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வெங்காயம் சிறந்த மருந்தாகிறது. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, கொழுப்பின் அளவை குறைக்க கூடிய மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: வெங்காயம், உப்பு, மஞ்சள் பொடி. வெங்காயத்தை நல்லெண்ணெய்யில் வதக்கி மஞ்சள் மற்றும் மிளகு பொடி சேர்க்கவும். வதக்கிய இந்த வெங்காயத்தை காலை உணவுடன் தினமும் எடுத்து வருவதால் அதிகப்படியான ரத்த கொழுப்பு கட்டுப்படும். நாகரிக முன்னேற்றம் மற்றும் பழக்க வழக்கம் காரணமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிற நோய்களும் வருகிறது. இதற்கென மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இரு வகை மருந்துகளும் உடலுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்துகின்றன. இதனை தவிர்க்க நாம் அன்றாடம் 50 கிராம் வெங்காயத்தை உணவுடன் எடுத்து கொள்ளும்போது, ரத்த கொழுப்பு மற்றும் சர்க்கரை நோயின் அளவு சரிசெய்யப்படுகிறது.