வாயு தொல்லை நீக்கும் தனியா
3/2/2017 2:16:21 PM
அன்றாடம் ஒரு இயற்கை மூலிகை மருந்து குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் உணவுக்கு மணம் மற்றும் சுவை சேர்க்கின்ற தனியா(கொத்தமல்லி) குறித்து பார்க்கலாம். இரண்டு ஸ்பூன் தனியா பொடியில் 30 கலோரி சத்துக்கள் இருப்பதாகவும், 68% வைட்டமின் கே சத்து இருப்பதாகவும் விஞ்ஞானம் தெரிவிக்கிறது. அந்தவகையில் நாம் அன்றாடம் உணவில் சேர்க்கின்ற தனியா, வைட்டமின் கே, சி, இரும்பு சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. இது மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, ரத்தத்தை உறைய செய்யும் தன்மை கொண்டது. நரம்புகளில் அடைப்பு, இதய அடைப்பு, கால் மற்றும் கை வீக்கம் ஆகியவற்றை சரிசெய்கிறது. சிறந்த சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது. புண்களை விரைந்து ஆற்றும் தன்மையும் தனியாவில் அதிகம் உள்ளது. தனியாவை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் தேநீர் தயாரிப்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: தனியா, காய்ச்சிய பால், வெல்லம், சுக்குப்பொடி, ஏலக்காய்பொடி. பாத்திரத்தில் சிறிதளவு நீருடன், தனியா, சுக்குப்பொடி, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்கவிடவும். கலவை நன்கு கொதித்ததும் தனியே வடிகட்டி கொள்ளவும். பின்னர் அதனுடன் மிதமான சூடு பால் சேர்த்து குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு வழங்கலாம்.
பயன்கள்: தனியா உள்ளுறுப்புகளுக்கு குளிர்ச்சி தருகிறது. மாதவிடாய் காலங்களில் உடலில் அதிக ரத்தப் போக்கை தடுக்கிறது. சுக்கு-மல்லி பயன்படுத்தி தயாரிக்கும் தேநீரை அருந்துவதால் சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் மற்றும் ரத்த கசிவு மறைகிறது. வயிற்று கோளாறு, வாயு தொல்லையை அகற்றி, குடல் புண்களை ஆற்றும் சக்தி மல்லியில் அதிகம் உள்ளது.
தனியாவை பயன்படுத்தி வயிற்று புண்களை குணப்படுத்தும் சட்னிகூட தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தனியா, வரமிளகாய், பூண்டு, தேங்காய், வெங்காயம், கருவேப்பிலை, சீரகம், கடுகு, உப்பு, நல்லெண்ணெய். பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு தனியாவை வறுக்கவும். காரத்தன்மைக்காக அதனுடன் ஒன்றிரண்டு வரமிளகாய் சேர்க்கவும். பிறகு தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். இந்த கலவையில் தண்ணீர் விட்டு, பாலை மட்டும் தனியே வடிகட்டி வைத்துக்கொள்ளவும். வேறொரு பாத்திரத்தில் நல்லெண் ெணய் விட்டு கடுகு, சீரகம், தட்டிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் தனியே எடுத்த பாலினை சேர்த்து கொதிக்கவிடவும். இந்த சட்னியுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்துடனும், இட்லி, தோசை, இடியாப்பத்துடனும் சாப்பிடலாம். தனியாவுடன் வெங்காயம், பூண்டு சேர்க்கும்போது, ரத்தத்தில் கொழுப்பு படிவதை குறைக்கிறது. இதனை சட்னி அல்லது துவையலாக அடிக்கடி பயன்படுத்தலாம். இந்த சட்னியை மருந்து எடுத்துக்கொள்பவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் சாப்பிடலாம்.
இது உணவு செரிமானத்தை எளிதாக்குகிறது. காரமில்லாத இந்த சட்னியை தினமும் உணவில் பயன்படுத்துவதால் விரைவில் வயிற்று புண்ணிலிருந்து நிவாரணம் கிடைக்கும். பெருவயிறு, வயிறு உப்பசத்தை சரிசெய்யும் தனியாபொடி:
நல்லெண்ணெயில் தனியா, கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயப்பொடி, மஞ்சள்பொடி சேர்த்து வறுக்கவும். இந்த கலவையை பொடியாக்கி அதனுடன் உப்பு சேர்த்து சாதத்துடன் சாப்பிடும்போது வயிறு உப்பசம், வாயு தொல்லை, பெரும்வயிறு சரியாகும். வயிற்று வலி, அல்சர் சரியாவதோடு பசியை தூண்டக்கூடியதாகவும் இருக்கிறது.