உள்ளுறுப்புகளை பலப்படுத்தும் சிவப்பரிசி
3/1/2017 2:48:00 PM
வேப்பம்பூ மற்றும் சிவப்பரிசி பற்றி இன்று பார்க்கலாம். வேப்பம் பூவானது பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கி, தொடர் மருத்துவ பயன்பாட்டில் இருந்து வருகிறது.கோடைக்காலத்தில் கிடைக்கின்ற வேப்பம் பூவினை சுத்தம் செய்து காயவைத்து கொண்டால் ஒரு வருடம் வரைக்கும் மருந்தாக பயன்படுத்தி கொள்ளலாம். இதனை துவையல் அல்லது ரசமாக எடுத்துக்கொண்டால், உடல் சோர்வு, தளர்வு, செரிமான கோளாறு ஆகியவற்றை நீக்குகிறது. சிறந்த பித்த சமனியாக செயல்பட்டு, அதிக பித்தம் சுரப்பதால் ஏற்படும் அரிப்பு மற்றும் ஈரல் வீக்கத்தை சரிசெய்யும் மருந்தாக உதவுகிறது. தற்போது காய்ந்த வேப்பம்பூவினை பயன்படுத்தி ரசம் செய்வது பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வேப்பம்பூ(உலர்ந்தது), புளிகரைசல், மஞ்சள் பொடி, கடுகு, பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து பொடி செய்த கலவை, வரமிளகாய், கொத்தமல்லி, நெய், பெருங்காயப்பொடி, உப்பு.
பாத்திரத்தில் நெய்விட்டு உருகியதும், பெருங்காயப்பொடி, கடுகு, வரமிளகாய், வேப்பம்பூ ஆகியன சேர்த்து நெய்யில் பொரிய விடவும். இதனுடன் புளி கரைசல், சிறிது மஞ்சள்பொடி, உப்பு, கலவை மற்றும் நீர் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், அதனுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். இதனை மாதம் ஒரு முறை பருகி வருவதால் வயிற்று பூச்சி தொல்லைகளில் இருந்து முழுமையான விடுதலை கிடைக்கும். குழந்தைகள் இதனை அருந்துவதால் பூச்சுகள் அழிக்கப்பட்டு, நல்ல சுறுசுறுப்பை கொடுக்கும். வேப்பம் பூ செரிமான கோளாறுகளை நீக்கி, பசியை தூண்டுகிறது. குருதியில் படிகின்ற கொழுப்புகளை அகற்றுகிறது. வயிற்று பூச்சிகளால் மயக்கம் போன்ற பிரச்னைகளில் இருந்து குழந்தைகளுக்கு நிவாரணம் கொடுக்கிறது. இதேபோல் கைகுத்தல் அரிசிகளில் ஒன்றாக பயன்படுத்தப்படும் சிவப்பு அரிசியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
குறிப்பாக வைட்டமின் ஏ, இ, புரதசத்து, மாவு சத்தும் நிறைந்து காணப்படுகின்றன. அரிதாக நாம் உணவில் பயன்படுத்தும் சிவப்பு அரிசியினை பயன்படுத்தி காப்பரிசி தயாரிப்பது பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சிவப்பு குத்தல் அரிசி(கழுவி, உலரவைத்தது), தேங்காய் துண்டு, ஏலக்காய் பொடி, பொட்டுக்கடலை, வெல்லப்பாகு, நெய்.கடாயில் நெய் விட்டு தேங்காய் துண்டுகளை வறுத்துக்கொள்ளவும். பின்னர் அகன்ற பாத்திரத்தில் சிவப்பு அரிசி, வெல்லப்பாகு, ஏலக்காய் பொடி, பொட்டுக்கடலை, வறுத்த தேங்காய் துண்டு மற்றும் நெய் சேர்த்து நன்கு கிளறவும். உமி நீக்கிய சிவப்பு குத்தல் அரிசியில் வைட்டமின் இ, புரதசத்து, இரும்பு சத்து, பொட்டாசியம் என்ற உப்பு சத்து, மாவு சத்து நிறைந்து உள்ளது. இந்த உணவை குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாப்பிடுவதால் செரிமான சக்தி அதிகரிக்கிறது. சீதள நோய்கள் சரிசெய்யப்படுகிறது. இதில் தேங்காய் சேர்த்து உண்பதால் குடல் புண்கள் ஆற்றப்படுவதோடு, உள்ளுறுப்புகள் பலமடைகிறது.